தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் இல்லாத தெரிவுக்குழுவில் என்ன பிரயோசனம் உள்ளது? என்று வினவுகின்றோம். பாராளுமன்ற பெரும்பான்மை இருக்கின்றது என்பதற்காக தாங்கள் நினைத்த போக்கில் அரசியல் தீர்வுகளை திணிக்க முடியாது என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
வட மாகாண சபையில் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளது. இது ஆரோக்கியமான விடயமாக இலலை. எனவே இரண்டு தரப்புக்களிலும் விட்டுக்கொடுப்புக்களை செய்து வட மாகாண நிர்வாகத்தை சுமுகமாக கொண்டு செல்ல ஒரு முயற்சி செய்யப்படவேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் கூறுகின்ற அனைத்து தாளங்களுக்கும் நாங்கள் ஆடிக்கொண்டிருக்க முடியாது. எனது கொள்கைகளையும் விட்டுக்கொடுக்க முடியாது என்றும் அமைச்சர் ஹக்கீம் கூறினார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் கேசரி நாளிதழுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்,
அரசியல் தீர்வு காண்பதற்கான இணக்கப்பாட்டை எட்டிக்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் நம்பகத்தன்மை என்பதே கிடையாது. அரசாங்கத்தின் அமைச்சராக இருந்துகொண்டே இதனை நான் கூறுகின்றேன். நம்பகத்தன்மை மற்றும் எந்தவிதமான தார்மீகமும் இல்லாத ஒரு தெரிவுக்குழுவாகவே இது இருக்கின்றது.
அது மட்டுமன்றி அனைத்து விதமான பாராளுமன்ற சம்பிரதாயங்களையும் மீறி இந்த தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற சம்பிரதாயங்களின் பிரகாரம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற அனைத்துக் கட்சிகளும் அங்கம் வகிக்கக்கூடிய வகையிலேயே இந்தத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டிருக்கவேண்டும்.
விசேடமாக ஆளும் கட்சியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு அடுத்தபடியாக கூடுதலான ஆசனங்களைக்கொண்டுள்ள கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் உள்ளது. அதனையும் உதாசீனம் செய்துவிட்டு எமக்கு இடம் வழங்கவில்லையாயின் அந்தத் தெரிவுக்குழுவில் நம்பகத்தன்மை இருப்பதாக கூற முடியாது.
எனவே அந்த பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் எடுக்கப்படுகின்ற எந்தவொரு தீர்மானத்துக்கும் நாங்கள் ஆதரவு வழங்குவதில் சிக்கல் நிலை தோன்றும். எங்களை சேர்க்காத ஒரு தெரிவுக்குழுவுக்கு நாங்கள் ஆதரவு வழங்கவேண்டுமா என்ற கேள்வி இந்த இடத்தில் எழுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நாங்களும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறவேண்டியது அவசியம் என்பதனை நாங்கள் வலியுறுத்துகின்றோம். அதனால்தான் நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்தேன்.
இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் தீவிரமான முயற்சி எடுக்கப்படவேண்டும். முழுப் பூசணிக்காயை சோற்றில் போட்டு மறைக்கும் வகையில் பேசிக்கொண்டிருக்க முடியாது.
அதற்காகவே பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசியலமைப்பு திருத்தங்களை எதிர்க்கட்சிகளின் பங்களிப்பு இன்றி செய்ய முயற்சிப்பது தார்மீகம் அல்ல. அதற்கு நாங்கள் உடந்தையாக இருக்க முடியாது. குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸை தெரிவுக்குழுவில் சேர்த்திருக்கவேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி இல்லாத தெரிவுக்குழுவில் என்ன பிரயோஜனம் உள்ளது என்று கேட்கின்றேன். பாராளுமன்ற பெரும்பான்மை இருக்கின்றது என்பதற்காக தாங்கள் நினைத்த போக்கில் நாட்டில் அரசியல் தீர்வுகளை திணிக்க முடியாது.
சிலநேரம் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக நான் கடந்த காலங்களில் குரல் கொடுத்தமையின் காரணமாக எங்களை தெரிவுக்குழுவில் புறக்கணித்திருக்கலாம். ஆனால் அது எனது அரசியல் சுதந்திரம். அரசாங்கம் கூறுகின்ற அனைத்து தாளங்களுக்கும் நாங்கள் ஆடிக்கொண்டிருக்க முடியாது. எனது கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது.
இது இவ்வாறு இருக்க தற்போது வட மாகாண சபையில் ஒரு இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளது. இது ஆரோக்கியமான விடயமாக இல்லை. எனவே இரண்டு தரப்புக்களிலும் விட்டுக்கொடுப்புக்களை செய்து வட மாகாண நிர்வாகத்தை சுமுகமாக கொண்டு செல்ல ஒரு முயற்சி செய்யப்படவேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றோம் என்றார்.
மதுமிதா




0 comments to "அரசுக்கும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவருக்கும் இடையே பனிப்போர் "