Home » » மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் குவியும் பிரான்ஸ் படையினர்

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுக்கு ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்க மற்றும் பிரஞ்சுப் படைகளை அனுப்புவதற்கான திட்டத்துக்கு ஐநாவின் பாதுகாப்புச் சபை அங்கீகாரம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்கு மேலும் வன்செயல்கள் நடந்துள்ளன.
தலைநகர் பான்குயிவில் ஆயுத மோதல் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றன.


பெரும்பாலும் முஸ்லிம் செலேக்கா குழுவைச் சேர்ந்த ஆயுதபாணிகள், கிறிஸ்தவ பெரும்பான்மையினர் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
கடந்த மார்ச் மாதத்தில் அங்கு அதிபரை கிளர்ச்சிக்காரர்கள் பதவி நீக்கம் செய்ய பிறகு, 4 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

பல கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேறிவிட்டதால் அவை வெறிச்சோடிக் கிடக்கின்றன. பல கிராமங்கள் எரிக்கப்பட்டு முற்றாக நிர்மூலம் செய்யப்பட்டுள்ளதாக அங்கு சென்ற எமது செய்தியாளர் ஆண்ட்ரூ ஹார்டிங் தெரிவித்துள்ளார்.
அங்கு நடக்கின்ற நிகழ்வுகள் ஒரு மனிதநேய பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக பிரஞ்சு வெளியுறவு அமைச்சர் லாரண்ட் ஃபபியஸ் கூறியுள்ளார்.
இரு மாதங்களுக்கு முன்னர் அங்கு விஜயம் செய்த ஐரோப்பிய ஒன்றிய சர்வதேச மனிதநேய உதவி அமைப்பைச் சேர்ந்த கிறிஸ்டலினா ஜோர்ஜிவா அவர்கள், அங்குள்ள மக்கள் விரக்தி நிலையில் இருப்பதாகக் கூறுகிறார்.

மேலதிக சர்வதேசப் படைகளை அங்கு அனுப்புவதன் மூலம் மாத்திரமே அங்கு ஒரு மாற்றத்தை கொண்டுவரமுடியும் என்று பிரான்ஸ் கூறுகிறது.
ஐநா பாதுகாப்புக் கவுன்ஸிலின் அங்கீகாரம் கிடைத்தால் ஓரிரு வாரங்களிலேயே மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று ஐநாவுக்கான பிரான்ஸின் தூதுவர் ஜெரார்ட் அரவுட் கூறுகிறார்.

தற்போது 1600 க்கும் மேற்பட்ட பிரஞ்சு படையினர் அங்கு நிலைகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments to "மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் குவியும் பிரான்ஸ் படையினர் "

Leave a comment

Powered by Blogger.