ஒருகொடவத்தை சுங்க பரிசோதனை மத்திய நிலையத்தில் வைத்து சில மாதங்களுக்கு முன்னர்
சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை போதைப் பொருளுடன் கூடிய கொள்கலனை வரிச் சலுகை அளித்து விடுதலை செய்யுமாறு கோரி கடிதம் அனுப்பியதாக கூறப்படும் பிரதமர் தி.மு.ஜயரத்னவின் இணைப்புச் செயலாளரான கீர்த்தி சிறி வீரசிங்க இணைப்புச் செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் தி.மு.ஜயரத்னவுக்கு அனுப்பி வைத்துள்ளார். டிசம்பர் மாதம் 9 ஆம் திகதியிட்டு அவர் அனுப்பி வைத்துள்ள குறித்த ராஜினாமா கடிதத்தில் புத்த சாசன மற்றும் மதவிவகார அமைச்சரின் இணைப்புச் செயலாளர் என்ற பதவியிலிருந்து தான் ராஜினாமா செய்வதாகவும் அதனை ஏற்றுக்கொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் தனக்கும் குறித்த ஹெரோயின் கொள்கலனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அந்த ராஜினாமா கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே குறித்த இணைப்புச் செயலாளர் புத்தசாசன மற்றும் மதவிவகார அமைச்சுக்கு உரித்தான அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன அமைச்சும் அறிவித்துள்ளது. இதனை உள்ளூரின் பிரதான செய்திச் சேவை ஒன்று தெரிவித்தது.




0 comments to "போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய பிரதமர் , செயலாளர் ராஜனாமா"