தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் பூதவுடலை தனிப்பட்ட முறையில் நல்லடக்கம் செய்வதற்கு அவரது குடும்பத்தினர் விரும்புவதால் அவரது நல்லடக்கத்தை பார்வையிடும் வாய்ப்பு பொதுமக்களுக்கு கிடைப்பது சாத்தியமில்லை என அந்நாட்டு அரசாங்க பேச்சாளர் ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
நெல்சன் மண்டேலாவின் சொந்தக் கிராமமான குனுவில் நாளை ஞாயிற்றுக்கிழமை இடம் பெறவுள்ள அவரது மரணச் சடங்கில் வெளிநாட்டு முக்கியஸ்தர்கள் அரசியல் தலைவர்கள் உட்பட குறைந்தது 5000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் குனு கிராமத்தில் மண்டேலாவின் பூதவுடலுக்கான ஆரம்பகட்ட பொது மக்கள் அஞ்சலி நிறைவு பெற்றதும் தொடர்ந்து நடைபெறும் சடங்குகள் அவரது குடும்பத்தினரின் விருப்பத்தின் பிரகாரம் தனிப்பட்ட முறையில் இடம்பெறும் என அரசாங்க பேச்சாளரான பும்லா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
அவரது குடும்பத்தினர் நெல்சன் மண்டேலாவை நல்லடக்கம் செய்வது குடும்ப விவகாரம் என குறி்ப்பிட்டுள்ளனர் எனத் தெரிவித்த பும்லா அவர்கள் அவரது மரணச் சடங்கை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கு விரும்பவில்லை. குறிப்பாக அவரது பூதவுடல் புதைகுழியில் வைக்கப்படுவதை மக்கள் காண்பதை அவர்கள் விரும்பவில்லை என்று கூறினார்.
பொது மக்கள் அஞ்சலிக்காக தலைநகர் பிரெடோரியாவில் கடந்த 3 தினங்களாக வைக்கப்பட்டிருந்த நெல்சன் மண்டேலாவின் பூதவுடல் இன்று சனிக்கிழமை காலை இராணுவ விமானத்தில் அவரது சொந்த இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு இடம் பெறும் 2 மணி நேர பொது மரணச்சடங்கிற்காக விசேட மண்டபமும் வளைவான கூரையைக் கொண்ட பாரிய கூடாரமும் அமைக்கப்பட்டுள்ளன.
நெல்சன் மண்டேலாவின் மரணச் சடங்கு தொடர்பான செய்திகளை சேகரிக்க வியாழக்கிழமை மாலை 3000 ஊடகவியலாளர்கள் வரை கேப் மாகாணத்திலுள்ள குனு கிராமத்தை முற்றுகையிட்டிருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கேப் மாகாண விமான நிலையத்துக்கு இராணுவ விமானத்தில் கொண்டு வரப்படும் நெல்சன் மண்டேலாவின் பூதவுடல் இராணுவ மரியாதையொன்றையடுத்து பீரங்கி வாகனமொன்றில் வைக்கப்பட்டு பின்னர் பிரேதம் வாகனத்தின் மூலம் குனு கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு அவரது தெம்பு சமூகத்தினர் பாரம் பரிய மரணச் சடங்குகளை நடத்தவுள்ளனர்.







0 comments to "நெல்சன் மண்டேலாவின் பூதவுடல் தனிப்பட்ட முறையில் நல்லடக்கம்"