Home » » வட மாகாணசபை ஆளுநரை உடனடியாக பதவி நீக்க வேண்டும்: சுமந்திரன்

அரசியலமைப்பின் சரத்துக்கள் தொடர்பாகவோ சட்ட நுணுக்கங்கள் தாற்பரியங்கள் தெரியாத வட மாகாண சபை ஆளுநரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று சபையில் தெரிவித்தார்.

அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை மத்திய அரசாங்கம் வழங்குவதில்லையென்றும் அவர் குற்றம் சாட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற போக்குவரத்து அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே சுமந்திரன் எம்.பி. இதனை தெரிவித்தார்.

சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

அரசியலமைப்பில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுடன் செயற்படுவதற்கே வட மாகாண சபை அனைத்து முயற்சிகளையும் முன்னகர்வுகளையும் மேற்கொள்கின்றது. சட்டங்களை மதிக்கின்றது.

ஆனால் அரசாங்கமும் வட மாகாண ஆளுநரும் அவ்வாறு செயற்பட விடாது அரசியலமைப்பை மீறி நடக்கின்றனர். ஆனால் அரசியலமைப்பை மீறி வட மாகாண சபை செயற்படுவதாக ஆளுநர் குற்றம் சாட்டுகிறார்.

அரசியலமைப்பு தொடர்பாகவோ அதிலுள்ள சரத்துக்கள் மற்றும் சட்ட நுணுக்கங்கள் தாற்பரியங்கள் எதுவும் தெரியாத தெளிவில்லாத சட்டவிரோத கொலைகளில் மற்றும் தேர்ச்சி பெற்றவரான வட மாகாண ஆளுநர் தான் அரசியலமைப்பை மீறிச் செயற்படுகின்றார்.

ஆளுநர் மட்டுமல்ல மத்திய அரசாங்கமும் அரசியலமைப்பை மீறியே செயற்படுகின்றது. ஒரு மாகாணத்திற்கு பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்படும் போது அம் மாகாணத்தின் முதலமைச்சரின் இணக்கம் பெறப்பட வேண்டுமென அரசியலமைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இதனை மீறி வட மாகாண பொலிஸ் அத்தியட்சகராக பூஜித ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். இவரை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அரசாங்கம் இவ்விடயத்தில் அரசியலமைப்பை மீறியுள்ளது.

0 comments to "வட மாகாணசபை ஆளுநரை உடனடியாக பதவி நீக்க வேண்டும்: சுமந்திரன்"

Leave a comment

Powered by Blogger.